ஈரானில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 321 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 50,016 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கரோனாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.