ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என்று இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
9-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 4 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. இன்று 5-வது கட்ட பேச்சு நடக்கிறது.
இதில் விவசாயிகள் போராட்டத்துக்கு சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். குருநானக் பிறந்தநாள் விழாநிகழ்ச்சியில் ஜஸ்டின் பேசுகையில் “இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால்,நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன். உரிமைகளுக்காக நீங்கள் அமைதியாகப் போராடும் போது, அதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும். ” எனத் தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் பேச்சுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டுத் தலைவர்கள் முழுமையான தகவல்களை அறியாமல் கருத்துக்களைத் தெரிவிப்பதை பார்க்கிறோம்.
அதிலும் குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல், கனடா நாட்டின் தூதரைநேரில் அழைத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு தலைவர்கள் கருத்துக் கூறியதற்கு கண்டனத்தையும் மத்திய அ ரசு நேற்றுப் பதிவு செய்தது.
இந்நிலையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானே டுஜாரிக் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஸ்டீபானே கூறுகையில் “ ஜனநாயக ரீதியில் அமைதியாக மக்கள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.