உலகம்

அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து: போர்ச்சுக்கல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு இலவசமாகச் செலுத்தப்படும் என்று போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போர்ச்சுக்கல் சுகாதாரத் துறை அமைச்சர் மர்டா கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்க போர்ச்சுக்கல் அரசு முடிவு செய்துள்ளது. 22 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகளை 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்க இருக்கிறோம்.

கரோனா தடுப்பு மருந்து பெறுவது தொடர்பாக மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், பைசர் ஆகிய மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல்லில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT