இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன மாணவி அபு கோஷ், 15 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாலஸ்தீன ஊடகங்கள் தரப்பில், ''பாலஸ்தீனத்தின் பிஸ்சிட் பல்கலைக்கழக மாணவி அபு கோஸ், இஸ்ரேலுக்கு ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளைத் தனது பதிவுகளில் தெரியப்படுத்தியதற்காக ஆகஸ்ட் மாதம் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 15 மாத சிறை தண்டனைக்குப் பிறகு அபு கோஷ் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட அபு கோஷை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.