இராக் - சிரியா எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் புரட்சிகர ராணுவப் படைத் தளபதி கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “இராக் - சிரியா எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படைத் தளபதி பலியானார். இந்தத் தாக்குதலில் ராணுவத் தளபதியுடன் மூவர் பலியாகினர். இதில் ராணுவத் தளபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து அங்கு போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலும் ஈரானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பொதுமக்களும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
மேலும், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளுக்கும், ஈரான் ராணுவத்திற்கும் இடையேயும் சண்டை நடந்து வருகிறது.
முன்னதாக, இவ்வருடத் தொடக்கத்தில் ஈரான் புரட்சிகரப் படை அமைப்பின் தளபதி காசிம் சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார்.