வடகொரியாவுக்கு சீனா தனது கரோனா தடுப்பு மருந்தைப் பரிசோதனைக்காக வழங்கியுள்ளது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் தரப்பில், ''வடகொரிய அதிபர் கிம்முக்கு சீனா தரப்பில் கரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கரோனா தடுப்பு மருந்து கிம் நிர்வாக அவையில் உள்ள உயர் அதிகாரிகள் பலருக்குப் பரிசோதனை முயற்சியாகச் செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்குக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொள்வதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து கூறி வருகிறார்.