உலகம்

புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஆர்வம்: ஒபாமா

செய்திப்பிரிவு

இந்தியாவில் புதிதாக அமையவுள்ள அரசுடன் இணைந்து செயல்பட ஆவல், எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் டெல்லியில் அமையும் புதிய அரசுடன் நெருக்கமாக செயல்பட ஆவல், எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். வரும் ஆண்டுகளில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இந்தியாவில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக அந்த நாட்டு மக்களுக்கு பாராட்டியாகவேண்டும்.

பன்முகத்தன்மை, சுதந்திரம் ஆகியவை சார்ந்த நடத்தை நெறிமுறைகளை உயிரோட்டத்துடன் காட்டி நிரூபிக்கும் வகையில் மிகப் பெரிய தேர்தல் பணிகளை சிறப்பாக நடத்திக் காட்டி உலகுக்கே உதாரணமாக திகழ்கிறது இந்தியா.

கடந்த பல ஆண்டுகளாக கட்சி பார்வை இன்றி இரு நாடுகளுக்கும் இடையே நெருக்க மான நட்புறவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்புறவு மூலம் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண இணைந்து செயல்படக்கூடிய திறனை மேம்படுத்த முடிந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் தேர்வானாலும் அமெரிக்கா ஆதரிக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT