ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ8.46 கோடி) லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2013 செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக இருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதலாகவே ஐ.நா.வில் சில காரியங்களைச் சாதிக்க தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்த ஐ.நா. அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சில பணிகளை தொழிலதிபர்களுக்குச் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார் ஆஷ்.
மேலும், ஐ.நா. பொதுச் சபை தலைவராக இருந்தபோது சீனாவின் மகாவு பகுதியில் ஐ.நா. நிதியுதவியில் கருத்தரங்கு மையம் கட்டுவதற்கு, என்ஜி லாப் செங் என்னும் தொழிலதி பருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவரிடமிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்றுள்ளார் ஆஷ்.
இதுபோன்று ஆஷ் சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் ஆஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அட்டர்னி பிரீத் பராரா அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியதைத் தொடர்ந்து ஆஷ் மற்றும் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா.வுக்கான டொமினிக் குடியரசு துணை தூதர் பிரான்சி லோரன்ஸே, என்ஜி லாப் செங், ஜெஃப் யின், சுவேய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா. அமைப்பில் தலைவராக பதவி வகித்த ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, “ஆஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த போது, மூன் அதிர்ச்சியடைந் தார். மிகுந்த மனவருத்தம் அடைந்தார்.
இந்த செயல் ஐ.நா.வின் இறை யாண்மையின் மையத்தையை அசைத்து விட்டது. அவர் கைது செய்யப்பட்டது ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்கும் தெரியும். அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டால் உரிய வகையில் ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.