எகிப்து பிரமிட் முதல் ஆஸ்திரேலிய ஒபேரா இல்லம் வரையிலான ஐக்கிய நாடுகள் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களாக திகழும் 200-க்கும் அதிகமான கட்டிடங்கள் வரும் 24-ம் தேதி நீல நிறத்தில் ஒளிர உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் நிறமான நீல நிறத்தில் இந்தச் சின்னங்கள் ஒளிரவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ஐ.நா. பொதுச்சபை சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஐ.நா. தகவல் தொடர்பு பணியில் இருக்கும் கிறிஸ்டினா கலாச் கூறும்போது, "இந்த தினத்தில் மிக குறைந்த அளவிலான எரிசக்தி பயன்பாடே இருக்க வேண்டும் என்பதை அனைத்து அதிகாரிகளும் உறுதிபடுத்த வேண்டும். நீல நிறம் ஒளிர்வதால் பசுமையின் முக்கியத்துவத்தை மறந்துவிடக் கூடாது" என்றார்.
ஐ.நா. அனுசரிக்கும் ஒவ்வொரு தினத்துக்கு சில நோக்கங்களின் முக்கியத்துவம் அறிவுறுத்தும் வகையில் அமையும். அந்த வகையில் இம்முறை நீல நிறம் ''வலுவான ஐ.நா., சிறந்ததோர் உலகம் (strong UN, better world)" என்பதை வலியுறுத்தும் என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. நினைவு கட்டிடங்களைத் தவிர பிரேசிலில் உள்ள கிறிஸ்துவின் சிலை, ரஷ்யாவின் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம், ஜார்டனில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, இத்தாலியின் உள்ள பைசா நகர சாய்ந்த கோபுரம் உள்ளிட்டவையும் நீல நிறத்தில் ஒளிர உள்ளன.