உலகம்

எங்களை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பார்க்கவும்: செயலிகள் தடை விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா கண்டனம்

ஏஎன்ஐ

சீன செயலிகளுக்கு தொடர்ந்து தடை விதித்துவிட்டு அதற்கு தேசப் பாதுகாப்பை காரணம் சொல்லும் இந்தியாவின் போக்கு ஏற்புடையது அல்ல என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 43 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

இந்திய சைபர் குற்றப் பிரிவு ஒருங்கிணைப்பு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட செயலிகள் அனைத்தும் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாக வந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பின்னணி கொண்ட மொபைல் செயலிகளுக்கு இந்தியா தொடர்ந்து தடை விதித்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் தேசப் பாதுகாப்பு போர்வையில் தடை விதிக்கப்படுகிறது. இந்தியாவும் - சீனாவும் பரஸ்பரம் தங்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டுமே தவிர அச்சுறுத்தலாக அல்ல. இந்திய தரப்பு பாரபட்சமற்ற தொழில் சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT