மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. கவுதமாலாவின் தென் கிழக்குப் பகுதியான சான்டா கேத்ரினா பினுலா பள்ளத் தாக்கு பகுதியில் சில நாட் களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
எல் காம்பரே என்ற கிராமத்தில் மண் சரிந்து 125 வீடுகள் புதைந்தன. இதேபோல சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த விபத்துகளில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப் படுகிறது. மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.