கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக நிற்க வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கு எதிராக எதிர்த்து நின்றால், அதன் பரவலைத் தடுக்கலாம். இதற்கு அதிக முயற்சி தேவை” என்றார்.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,864 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,29,133 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஜெர்மனியில் 90 பேர் பலியான நிலையில், கரோனா பலி எண்ணிக்கை14,112 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.