மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்து அகதிகள் பிரச்சினையை தீர்க்க 17 அம்ச புதிய செயல் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய யூனியன், பால்கன் தீபகற்ப பகுதி நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் ஏற்பட்டு வரும் சிரியா, இராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அதிக அளவிலும், வறுமையின் பிடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அகதிகள் வருகின்றனர். இவற்றில் சிரியா, இராக்கில் இருந்து வருபவர்களே அதிகம். கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இவர்களை ஜெர்மனி தவிர ஐரோப்பிய நாடுகள் தயக்கத்துடன் பல கட்டுப்பாடுகளுக்கு பின்னரே ஏற்றுக் கொள்கின்றன.
கடல் வழியே வரும் போது படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. சிரியாவில் இருந்து அகதியாக வந்த 3 வயது சிறுவன் துருக்கி கடற்கரையில் பிணமாக கிடந்த புகைப்படம் வெளியான பிறகு, அகதிகள் பிரச்சினை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. அகதி களை ஏற்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தயக்கம் காட்டக் கூடாது என்று கோரிக்கை வலுத்தது. இதை யடுத்து அகதிகளை ஏற்பதில் ஐரோப்பிய நாடுகள் சற்று இறங்கி வந்தன. இதில் ஜெர்மனி மட்டும் தாராளமாக அகதிகளை ஏற்றுக் கொண்டது.
சிரியாவில் முதலில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மட்டும் தாக்குதல் நடத்தியது. இப்போது ரஷ்யாவும் அங்கு தாக்குதலை தொடங்கியுள்ளது. எனவே சிரியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி அதிக அளவில் அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பால்கன் தீபகற்பம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அகதிகள் வரத்து அதிகமானதால் ஹங்கேரி தனது எல்லையை சமீபத் தில் மூடியது. ஸ்லோவேனியா, குரோஷியா உள்ளிட்ட நாடுகள் எல்லையை மூடப் போவ தாக அறிவித்துள்ளன. இதனால் அகதிகள் போக வழியின்றி மரத்தடி யிலும், வெட்ட வெளியிலும் தங்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இப்போது கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் அகதிகள் உயிரிழக்கும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய யூனியன், பால்கன் தீபகற்ப பகுதி நாடுகள் கூடி ஆலோசனை நடத்தின.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் இருநாட்கள் நடை பெற்ற இந்த கூட்டத்தில் ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, ஆஸ்திரியா, பல்கேரியா, குரோஷியா, மாசிடோ னியா குடியரசு உள்ளிட்ட நாடு களின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் முதல்கட்டமாக கடும் பனி, மழையால் வாடி வரும் அகதிகளின் உயிரை காப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அகதிகளுக்காக எல்லையை மீண்டும் திறக்க ஹங்கேரி ஒப்புக் கொண்டுள்ளது. பிற நாடுகளும் எல்லையை மூடப்போவதில்லை என்று உறுதி கூறியுள்ளன.
அகதிகளை வரவேற்று தங்கவைக்க மேலும் பல சிறப்பு முகாம்களை திறக்கவும், பாதுகாப்பாக அனுப்பி வைக்க கூடுதல் பேருந்துகளை அனுமதிப்பதற்கும், அகதிகளை ஒழுங்குபடுத்த போலீஸாரை அதிக அளவில் நியமிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மேலும் சுமார் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடமும், உணவும் ஏற்பாடு செய்ய அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு உதவ ஐ.நா. அகதிகள் பாதுகாப்பு பிரிவும் முன் வந்துள்ளது.