அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், “ கடந்த 24 மணி நேரத்தில் 1,94,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 82,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது 2 லட்சத்தை நெருங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், கலிப்போர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.