துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் பலியாயினர். காயமடைந்த 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இடதுசாரிகள் மற்றும் குர்திஷ் ஆதரவு குழுக்கள் சார்பில் நேற்று அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கூடியிருந்தவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலில் ஒரு முறை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்ட தாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சிறிது இடைவெளியில் அடுத்தடுத்து 2 தடவை குண்டுகள் வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் பின்னர் தெரிவித்தன.
தற்கொலைப் படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு இந்த தாக்கு தலை நடத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு அரசின் செய்தி நிறுவன மான அனடோலியா தெரிவித் துள்ளது.
அந்நாட்டு சுகாதார அமைச்சர் முகமது மியூசினோக்லு, இந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் அகமது தவுடோக்லுவிடம் தகவல் தெரிவித்ததாக அனடோலியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிர வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவலை விரைவில் தெரிவிப்போம்” என்றார்.
வரும் நவம்பர் 1-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குர்திஸ்தான் ஒர்க்கர்ஸ் கட்சி (பிகேகே) மற்றும் அரசுப் படைகளுக்கிடையிலான 2 ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் சண்டை தொடங்கி உள்ளது.