தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென் கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,789 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 223 (இதில் 33 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்) பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென் கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,789 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 494 பேர் பலியாகி உள்ளனர். தென்கொரியாவில் கரோனா இறப்பு விதம் 1.72 % ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் குணமடைந்தவர்கள் சதவீதம் 92% ஆக உள்ளது. இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.