அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20 அன்று பதவிஏற்பார். ஆட்சி மாறும் முன்பே காட்சிகள் மாறத் தொடங்கி விட்டன. தோற்ற அதிபர் வெற்றி பெற்றவருடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்து, அடுத்த சில நாட்களில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்து, அதற்குப் பிறகு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக தன் தோல்வியை ஒப்புக் கொள்வது அமெரிக்க மரபு. தானே வெற்றி பெற்றதாகவும், தேர்தல் தொடர்பாக வழக்குகள் தொடரப் போவதாகவும் டொனால்டு ட்ரம்ப் கூறி வருவதை மிகப் பெரும்பாலோர் பொருட்படுத்தவில்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்க பெருநகர்களில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், திரளாகக் கூடி கொண்டாடத் தொடங்கினர். வெள்ளை மாளிகை அருகே நடந்த கொண்டாட்டத்தைப் பார்த்தஉளவுத் துறை அதிகாரி ஒருவர் ‘‘வன்முறையைஎதிர்பார்த்த எங்களுக்கு இந்த கொண்டாட்டத் தைப் பார்க்கும் போது நிம்மதியாக இருக் கிறது’’ என்று கூறியது நாட்டின் உணர்வை பிரதிபலித்தது.
நாட்டின் ஆன்மாவை பாதுகாக்கவும், கண்ணியம், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மீட்டெடுக்கவும் அளிக்கப்பட்ட வாக்குகளே பைடனின் வெற்றிக்கு மூல காரணம். அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெற முடிவு செய்திருந்த 77 வயது பைடனை மீண்டும் தேர்தல் களத்துக்கு வரச் செய்ததும் அதே காரணங்களே. நான்கு வருடங்களாக நாள்தோறும் ட்விட்டர் மற்றும் தொலைக்காட்சியில் ட்ரம்பின் பிளவு மனப்பான்மை யையும், மற்றவர்களைத் தாக்கும் போக்கை யும் பார்த்து வெறுத்துப் போன பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு, ‘‘ஒட்டகத்தின் முதுகை உடைத்த வைக்கோல்’’ போன்று வந்தது அவர் கரோனா தொற்றைக் கையாண்ட விதம்.
‘‘இன்று அமெரிக்காவில் உள்ள பெற்றோருக்கு எல்லாம் விடிவு காலம், என் மகன்களைப் பார்த்து வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கியம்; தன் வினை தன்னைச் சுடும்” என்றுநான் இப்போது தைரியமாகச் சொல்ல முடியுமென அரசியல் நிபுணர் வான் ஜோன்ஸ்கண்ணீர் விட்டு சிஎன்என் தொலைக்காட்சியில் கூறிய போது, அவர் தம் உணர்வை மட்டுமன்றி பைடனுக்கு வாக்களித்த ஏழரை கோடி அமெரிக்கர்களின் உணர்வையும் வெளிப் படுத்தியுள்ளார்.
இந்த தேர்தலில் இரு கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளன. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, அமெரிக்க காங்கிரஸில் 5 இடங்களை ஜனநாயகக் கட்சியிடம் இருந்து கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், செனட் பெரும்பான்மையை தற்போதைக்கு தக்க வைத்துக் கொண்டு, மாநில அளவிலான தேர்தல்களிலும் கூடுதல் வெற்றிகளை அடைந்துள்ளது. நாடு முழுவதும் கிராமப்புற ஓட்டுக்களை மிகப் பெருபான்மையில் பெற்று, பொதுவாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் தொழிலாளர்களை தம் பக்கம் ஈர்த்து குடியரசுக் கட்சிக்கு அதன் வரலாற்றில் முதல் முறையாக 7 கோடி வாக்குகளைப் பெற்று ஒரு புதிய அணியையே உருவாக்கியுள்ளார் ட்ரம்ப்.அதன் விளைவாக அக்கட்சியில் அவரின் ஆதிக்கம் தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தோற்ற அதிபர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது வழக்கம். அமெரிக்காவின் 22-வது அதிபராக 1885 - 89 கால கட்டத்தில் இருந்து, மீண்டும் போட்டியிட்டு தேர்தலில் தோல்வி அடைந்த குரோவர் கிளீவ்லென்ட், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் போட்டியிட்டு 24-வது அதிபரானார். அதுபோன்று, 2024 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதனாலேயே அவர் கட்சியினர் அவரிடம் தற்போதைய தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள் எனச் சொல்ல முடியாமல் தற்போது வாய் அடைத்துப் போய் உள்ளனர்.
தேர்தலில் எந்த அதிபரும் பெறாத அளவுக்கு ஏழரைக் கோடி வாக்குகளைப் பெற்றுபைடன் - கமலா ஹாரிஸ் அணி வரலாறு படைத்துள்ளது. பல தேர்தல்களில் வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்துவிட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஓட்டளிக்கத் தூண்டி அந்த இனத்தின் 85 சதவிகித வாக்குகளைப் பெற்றும், பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளை தன் கோட்டையாக்கியும் பைடனின் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுள்ளது.
அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவருமே பேரணிகளை விரும்புபவர்கள். இந்தியாவிலும், அமெரிக்காவிலும், அவர்கள் நடத்திய பேரணிகளைப் பார்த்தோர் அவர்களை நெருங்கிய நண்பர்களாகக் கருதினர். வட கொரியாவின் அதிபரை தன் நண்பர் எனச் சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப், நட்பு கொண்டாடும் பண்பு கொண்டவர் எனச் சொல்ல முடியாது. வட கொரியாவின் அதிபரை தன் இனிய நண்பர் என ட்ரம்ப் சொன்னதில் இருந்து ட்ரம்ப் எவரையாவது நண்பர் என்றால் அது ஒரு பலவீனமாகவே கருதப்பட்டது.
ட்ரம்ப் தோல்வி அடைந்ததும், பைடனுக்குமுதலில் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களில் ஒருவர் பிரதமர் மோடி. அரசியலிலும், பன்னாட்டு உறவிலும் நிரந்தர நட்போ, எதிர்ப்போ கிடையாது என்பதை இது நினைவுபடுத்துகிறது.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டுமே அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதை வைத்தே வெளிநாட்டுக் கொள்கைகளை முடிவு செய்பவை. கடந்த 20 வருடங்களில் இந்தியா அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதாலும் 2 கட்சிகளின் ஆட்சிகளும் இந்திய உறவுக்கு முக்கியம் கொடுத்து வருகின்றன.
ட்ரம்ப்பின் கடுமையான குடிவரவுச் சட்டங்கள் பைடன் அரசால் தளர்த்தப்பட்டால் அது இந்தியர்களுக்கு சாதகமாக அமையும். தன் அம்மா ஷியாமளா கோபாலனையும், தாத்தாவையும் உன்னதமான நிலையில் வைத்து மதிக்கிற கமலா ஹாரிஸ், தான் பிறந்து வாழ்ந்த இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதையே விரும்புவார்.
மாற்றுக் கட்சியினராலும் பண்பாளர் எனப் போற்றப்படுவர் பைடன். அவருடைய ஆளுமைப் பண்புகளும், 47 ஆண்டு பழுத்த அரசியல் அனுபவமும், கமலாவின் துடிப்பும் கைகோத்து அமெரிக்கா உலக அரங்கில் இழந்த மதிப்பையும், நம்பிக்கையையும் மீட்கப் போகிற காலம் வந்து விட்டது.