கோவிட் 19 தடுப்பூசி தயாரிப்புப் பணி முன்னெடுப்பில் சிறப்பான ஸ்திரமான பங்களிப்பை நல்கிவருவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக அறியப்பட்ட கரோனா தொற்று இன்று உலகையே ஆக்கிரமித்து பெருந்தொற்றாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா என பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் இன்று காலை பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, அவர் கோவிட் 19 தடுப்பூசி தயாரிப்பில் சிறப்பான ஸ்திரமான பங்களிப்பை நல்கிவருவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக நன்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் 19 தடுப்பு மருந்து தயாரிப்பு முயற்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி காட்டும் உறுதித்தன்மைக்கு வாழ்த்துகள். இந்த பெருந்தொற்று உலகம் எதிர்பாராத நெருக்கடி. ஆகவே, உலக நாடுகள் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைத்து இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்தே செயல்படுவோம்" என ட்வீட் செய்திருந்தார்.
மேலும், பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவத்தின் மீதான ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசியதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தீர்வுகளை எட்ட உலக நாடுகளை ஒருங்கிணைத்ததில் டெட்ராஸ் அதானோம் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.அதேவேளையில் பிற நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உலா சுகாதார அமைப்பு நிறுத்திவிடக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.