ஹஜ் யாத்திரை கூட்ட நெரிசல் துயரத்துக்கு 9 நாட்கள் கழித்து பலியான ஈரான் யாத்திரிகர்களின் உடல்கள் ஈரான் வந்து சேர்ந்ததையடுத்து உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தில் ஈரான் அரசு உள்ளது.
மொத்தம் 463 ஈரானியர்கள் நெரிசலில் பலியானதில் தற்போது 104 உடல்கள் ஈரான் வந்து சேர்ந்தன, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகளில் அதிபர் ஹஸன் ரூஹானி கலந்து கொண்டார்.
கடுப்பில் இருந்த ரூஹானி கூறும்போது, “இந்த துயரமான விபத்துக்கு அதிகாரிகள் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் நாங்கள் அவர்களை மன்னிக்க மாட்டோம்.
இந்த விபத்தில் எங்களது மொழி சகோதரத்துவம் மற்றும் மரியாதை சார்ந்தது, ராஜதந்திர மொழியையும் தேவைப்பட்டால் பிரயோகிப்போம். துயரம் குறித்த உண்மையான காரணங்களை அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட வேண்டும்.
சவுதி அரேபிய அரசின் முறைகேடான நிர்வாகமும் திறமையற்ற அலட்சிய நிர்வாகமுமே இதற்குக் காரணம். இந்த துயரம் ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் ஈரான் அரசுத் தரப்பு தலைவர்கள், அதிகாரிகள் கடும் கோபாவேசத்துடன் தெரிவித்தது என்னவெனில், இறந்தவர்களின் தேசியக் கணக்கை இன்னமும் சவுதி அரேபியா சரிவரக் கொடுக்கவில்லை. 769 முஸ்லிம் யாத்திரிகர்கள் இறந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் பல நாடுகள் பல எண்ணிக்கைகளில் இறப்பை அறிவித்துள்ளன.
24 நாடுகளின் ஊடகங்கள், மற்றும் அயல்துறை அதிகாரிகள் கூறும் மரண எண்ணிக்கைக்கும் சவுதி கூறும் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை. 24 நாடுகளின் கணக்குப் படி பலியானோர் எண்ணிக்கை 1,036 ஆகும். மேலும், சில யாத்திரிகர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, பெயர்களில் உள்ளவர்கள் நாடும் திரும்பவில்லை, பலியானோர் பட்டியலிலும் இல்லை.
எனவே ஹஜ் நெரிசல் பலி 2000 பேர்களுக்கும் மேல் இருக்கும் என்று ஈரான் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.