அமெரிக்க அதிபரின் கரோனா தடுப்புப் படையின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி (43) நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம், அவர் முறைப்படி அதிபராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரோனா வைரஸ் பரவலை திறம்பட கட்டுப்படுத்துவதற்காக ‘கரோனா தடுப்புப் படை’ அமைக்கப்படும் என்றும், அது நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கரோனா தடுப்புப் படையின் இரண்டு துணைத் தலைவர் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி, முன்னாள் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையர் டேவிட் கேஸ்லரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு இருப்பதாக ் தெரியவந்துள்ளது
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, இவர்கள் இருவரும் அப்பதவிகளுக்கு அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தை குடும்பப் பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி பிரிட்டனில் 1977-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர். பின்னர், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், யேல் பல்கலை.யில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.
‘டாக்டர்ஸ் ஆப் அமெரிக்கா’ என்ற அமைப்பை தொடங்கியதன் மூலம் விவேக் மூர்த்தி அமெரிக்கா முழுவதும் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைவராக அப்போதைய அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு அப்பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறியதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தை விவேக் மூர்த்தி கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் சுகாதார ஆலோசகராக விவேக் மூர்த்தி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.