அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சவுதி அரசு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஜோ பைடனின் வரலாற்று ரீதியான வெற்றிக்கு சவுதி மன்னர் சல்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குச் சிறப்பான வாழ்த்துகள். இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதில் எதிர்பார்ப்புடன் இருப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார்.
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 பிரதிநிதிகள் வாக்குகளும் ஜோ பைடனுக்குக் கிடைத்ததால் அவரது வெற்றி உறுதியானது.
ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
தான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஜோ பைடன் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ஜோ பைடனின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.