அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பின் மக்களுக்கு உரையாற்றிய ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்: படம் | ஏஎன்ஐ. 
உலகம்

'அமெரிக்காவைக் குணப்படுத்த இதுதான் சரியான நேரம்' - அதிபராகும் ஜோ பைடன் உற்சாகப் பேச்சு

பிடிஐ

அமெரிக்காவைப் பிளவுபடுத்தாமல், ஒன்றிணைக்க முயல்வேன் என்று அதிபராக நான் உறுதியளிக்கிறேன். அமெரிக்காவைக் குடியுரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்கள், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பார்க்காமல், அமெரிக்காவாக மட்டுமே பார்க்கிறேன். அமெரிக்காவைக் குணப்படுத்துவதற்கு இது சரியான நேரம் என்று அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் வெற்றிக்குப் பிறகு உற்சாகமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 பிரதிநிதிகள் வாக்குகளும் ஜோ பைடனுக்குக் கிடைத்ததால் அவரது வெற்றி உறுதியானது.

இதையடுத்து, 290 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன. ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்பேறு நாடுகளிலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் வெற்றிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.

அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் பேசியாதாவது:

''அமெரிக்கா பிளவுபடாமல் இருக்க வேண்டும் என்று யார் கேட்கிறார்களோ அவர்களிடம் அமெரிக்கா ஒருங்கிணைக்கப்படும் என்று நான் அதிபராக உறுதியளிக்கிறேன். நான் அமெரிக்காவைக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்கள், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரித்துக் பார்க்கவில்லை. அமெரிக்காவாகத்தான் பார்க்கிறேன்.

அமெரிக்க வரலாற்றில் பரந்த மற்றும் மாறுபட்ட பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும் நான் வாக்குகளைப் பெற்றுள்ளேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என்னை இங்கு அமர வைத்தமைக்கும் நான் நன்றியுடன் இருப்பேன்.

இந்த தேசத்தின் மக்கள் தெளிவான வெற்றியை, மனநிறைவான வெற்றியை வழங்கியுள்ளார்கள். இது மக்களுக்கான வெற்றிதான். டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களித்தாலும், நான் அவர்களுக்கும் அதிபர்தான். அவர்களுக்கும் சேர்த்துதான் பணியாற்றுவேன்.

உங்களுக்கு ஏற்பட்ட மனவேதனையை நான் புரிந்துகொள்கிறேன். நானும் இரு முறை தோல்வி அடைந்துள்ளேன். ஆனால், இப்போது, ஒருவருக்கொருவர் வாய்ப்புக் கொடுத்திருக்கிறோம். அமெரிக்காவைக் குணப்படுத்த இதுதான் சரியான நேரம்.

அதிபராகப் பதவி ஏற்றபின், அமெரிக்காவின் ஆன்மாவை மீண்டும் நிலைநிறுத்துவேன். நாட்டை மீண்டும் மறுகட்டமைப்பு செய்வேன். அமெரிக்காவின் நடுத்தர மக்களை உலகம் மீண்டும் மதிக்கும்வகையில் செய்வேன். ஒரு குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

உலகிற்கான கலங்கரை விளக்கமாக, சிறந்ததாக அமெரிக்கா இருக்க வேண்டும் என நம்புகிறேன். சாத்தியங்கள் எனும் ஒற்றை வார்த்தையால்தான் நான் அமெரிக்காவை விவரிக்க முடியும். அமெரிக்கா ஒவ்வொருவருக்கும் அவர்களின் கனவை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்பை வழங்கும். அவர்கள் செல்வதற்குத் தேவையான சக்தியை கடவுள் வழங்குவார்.

கரோனா வைரஸால் இதுவரை 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டார்கள். ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இனிமேலும் எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்க முடியாது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும், அறிவியல் ஆலோசகர்களும், வல்லுநர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்''.

இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT