அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன் ட்ரம்ப்பை சற்று பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், பென்சில்வேனியாவில் முதலில் முன்னிலையில் இருந்த ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளி பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இங்கு 49.5% வாக்கு சதவீதத்துடன் பைடனும், 49.4% வாக்கு சதவீதத்துடன் ட்ரம்பு உள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் வாக்கு எண்ணிக்கை முடிவு பெறும் நிலையை நெருங்கி வரும் நிலையில் அலஸ்கா, ஜார்ஜியா, நிவேடா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அதிபராக முடியும்.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.
ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.