உலகம்

சட்டபூர்வமான வாக்குகள் மூலம்  அதிபராவேன்: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலை வகித்து வரும் நிலையில், சட்டபூர்வமான வாக்குகள் மூலம் அதிபர் பதவியை வெல்வேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டபூர்வமான வாக்குகள் மூலம் நான் எளிதாக அதிபர் பதவியை வெல்வேன். இச்சமயத்தில் எண்ணப்படும் ஓட்டுகள் சட்டத்துக்கு விரோதமானவை. இதனை நீதிமன்றம் தீர்மானிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது, 'இது மிகப் பெரிய வெற்றி' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இப்பதிவு விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது. இந்த நிலையில் ட்விட்டர் குறித்தும் ட்ரம்ப் விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அதிபராக முடியும்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT