வாடகை வாகன சேவை தரும் ஊபர் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இருந்ததை விட 20 சதவீதம் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும், மூன்றாம் காலாண்டில் ஊபர் வசதியைப் பயன்படுத்தும் விகிதமும் 50 சதவீதம் குறைந்துள்ளது.
8 கோடி மக்கள், 42.5 கோடி சவாரிகளுடன் ஒப்பீட்டளவில் செப்டம்பர் மாதம் சற்று நம்பிக்கையளிக்கும் படி இருந்திருக்கிறது.
"நிச்சயமற்ற சூழலிலும் கடந்த சில மாதங்களில் எங்களின் சவாரிப் பதிவு எண்ணிக்கை மெதுவாக ஏறுமுகத்தில் உள்ளது. இதில் செப்டம்பர் மாதம் சவாரிகளின் மூலம் 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்தன. இது கடந்த வருடத்தை விட 6 சதவீதம் மட்டுமே குறைவு.
நாங்கள் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், 30 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்களை, டெலிவரி செய்யும் ஊழியர்களை இணைத்ததன் மூலம் அவர்களுக்கு வருவாய்க்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த முன்னெப்போதும் இல்லாத சூழலில், 5,60,000 உணவகங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்களை இணைத்துள்ளோம்" என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரா கோஸ்ராவ்சாஹி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தை விட 18 சதவீதம் குறைந்து, 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஊபர் பெற்றுள்ளது.
பயணங்களைத் தாண்டி உணவு மற்றும் காய்கறி, மளிகைப் பொருட்களின் டெலிவரி சேவைக்கான தேவை அதிகமாகியுள்ளதால் ஊபரில் முன்பதிவு எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.