இங்கிலாந்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு டிசம்பர் மாதம் 2-ம் தேதிவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, மீண்டும் ஊரடங்கை கடந்த வாரம் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
மேலும் தேவையற்ற காரணங்களுக்காக மக்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துல் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது, உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் மீண்டும் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்றால் 10,99,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.