நேபாள விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடைசெய்து நிறுத்தி இருப்பதே இதற்கு காரணமாகவும், தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கண்டிக்கும் விதமான இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அந்நாட்டுத் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து நேபாள கேபிள் ஆப்பரேட்டர் கழக தலைவர் கூறும்போது, "இந்திய சேனல்களை நிறுத்த இங்கு பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள் நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதை ஏற்க முடியாது" என்றார். நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாக இந்தி சேனல்கள் மிகப் பிரபலமாகும்.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. புதிய அரசியல் சாசனத்தில் தங்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றும், தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்றும் நேபாளத்தின் தெற்கே வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேஸி, தாரஸ் சமூகத்தினரின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் எழுந்த தொடர் போராட்டங்களை அடுத்து, இதற்கு கவலை தெரிவித்த இந்தியா, சாசனத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் இதனை நேபாளம் மறுத்து விட்டது.
இதனிடையே உணவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு செல்லும் போக்குவரத்து அங்கு நிறுத்தப்பட்டது. நேபாள எல்லையில் அமைதியின்மை நிலவுவதாகவும் இதனால் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து சரக்குப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.