அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவுடன் அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ட்ரம்ப் அவ்வாறு திட்டமிட்டுள்ளார் என்றும் பரவிய தகவலை அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய இரவே முடிவுகள்
அறிவிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை ட்ரம்ப் மறுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், “தேர்தல் முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறவில்லை. ஆனால், இந்த நவீன காலத்தில் முடிவுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதது ஆபத்தானதுதான்.
தேர்தலுக்குப் பின் வாக்குச்சீட்டுகளை எண்ணுவதும், சேகரிப்பதும் ஆபத்தானது என்று நினைக்கிறேன். மேலும், இதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பு இல்லாதது. இதனால் தவறுகள் ஏற்படலாம் .எனினும், இதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் நாடுகள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார். அமெரிக்காவைப் பார்த்து உலக நாடுகள் சிரிக்கும் என்று ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.