மலேசியாவில் புதிதாக 659 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,548 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 659 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
31,548 ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனா கண்டறியப்பட்டவர்களில் 658 பேருக்கு சமூக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மலேசியாவில் கரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் நுழைய டிசம்பர் மாதம் வரை தடை விதிக்கப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில நாடுகளில் மட்டும் பல கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் மலேசியாவும் ஒரு நாடு.திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கரோனா அச்சம் காரணமாக மக்கள் யாரும் திரையரங்குக்கு வரத் தயாராக இல்லை. மிகக் குறைந்த அளவு ரசிகர்களே திரையரங்குக்கு வருகின்றனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.