இங்கிலாந்தில் மீண்டும் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த சில வாரங்களாகக் கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் அரசுக்கு அறிவுரை கூறியதைடுத்து, பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 274 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தப் பாதிப்பு 9.89 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரிட்டன் அரசின் கரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், தொற்றுநோய் தடுப்பு வல்லுநருமான ஜான் எட்முன்ட்ஸ் கூறுகையில், “இந்த மாதத்திலிருந்து பிரிட்டனில் கரோனா வைரஸ் 2-வது அலை வந்தது போன்று நாள்தோறும் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்த கட்டுப்பாடுகள் நிச்சயம் நோய்த் தொற்றைக் குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ உதவாது. ஆதலால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர்த்து மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே லண்டனில் வெளியாகும் 'தி டைம்ஸ் ஆப் லண்டன் நாளேடு' வெளியிட்ட செய்தியில், “வரும் திங்கள்கிழமை முதல் பிரிட்டனில் ஒரு மாதம் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்தும் மூடப்படலாம். மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள். பள்ளிகள் திறந்திருக்கும். மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்று அறிவிக்கப்படலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரிட்டன் அரசுத் தரப்பில் முழு ஊரடங்கு குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்து.
ஆதலால், பிரிட்டனில் கரோனா 2-வது கட்ட கரோனா அலை வராமல் தடுக்கும் வகையில், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.