துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
துருக்கியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.
ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்.
துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலையும் தாக்கின.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கார்கள் உட்பட பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன.
இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக துருக்கி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் 1999 -ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.