ரஷ்யாவைச் சேர்ந்த ‘யூ டியூப்’ பயனாளர் மிகைல் லிட்வின் என்பவர், மெர்சிடஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் மாடல் காரை புதிதாக வாங்கினார். இதன் விலை ரூ.2.4 கோடி.
புதிய காரை வாங்கிய நாள் முதல் அடிக்கடி காரில் கோளாறு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அதனால், அதிகாரப்பூர்வ டீலரிடம் காரை சரி செய்வதற்கு பல முறை அனுப்பி வைத்துள்ளார். கோளாறு ஏற்பட்டதும், சர்வீஸ் மையத்துக்கு அனுப்புவதும், அங்கிருந்து வந்த சில நாட்களில் கார் மீண்டும் கோளாறு ஏற்படுவதுமாக இருந்துள்ளது. இதுபோல் 5 முறை நடந்துள்ளது.
அதற்குள் காரில் இருந்து சில முக்கிய பாகங்களும் புதிதாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் மிகைல் லிட்வின் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதன்பிறகு கோளாறு ஏற்பட்ட போது, டீலரை தொடர்பு கொண்டால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் லிட்வினுக்கு ஆத்திரம் அதிகமானது.
அதன்பின், மெர்சிடஸ் காரை, காலியாக உள்ள வயல் வெளிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டார். இந்த வீடியோவை யூ டியூப் உட்பட சமூக வலைதளங்களில் 1.10 கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.