உலகம்

டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் அக்.24-ல் ஏலம்: ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

பிடிஐ

இங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்த உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் பலியாயினர்.

இந்நிலையில் கப்பலில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஒன்று, அதில் பயணம் செய்து, பின்னர் லைப் போட் மூலம் தப்பித்த ஆபிரகாம் லிங்கன் சாலமன் என்ற பயணியிடம் இருந்தது. அந்த மெனு கார்டு கடந்த வாரம் ஆல்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ.5.82 கோடிக்கு மெனுகார்டு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த மற்றொரு பயணியிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் ஒன்றும் தற்போது ஏலம் விடப்பட உள்ளது. 'ஸ்பில்லர்ஸ் அன்ட் பாக்கர்ஸ் பைலட்' வகையை சேர்ந்த இந்த பிஸ்கட் கடலில் பயணிப் பவர்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டது ஆகும். வரும் 24-ம் தேதி லண்டனில் இந்த பிஸ்கட் ஏலம் விடப்படுகிறது. ஹென்றி ஆல்ட்ரிஜ் அன்ட் சன் அமைப்பு இந்த ஏலத்தை நடத்துகிறது. பாக்கர்ஸ் பைலட் பிஸ்கட் ஆனது சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகைக்கு ஏலம் சென்றால் உலகிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன பிஸ்கட் என்ற பெருமையை பெறும். இதற்கு முன்னர் லுஸிதானியா மியூசியத்தில் இருந்த பிஸ்கட் ஒன்று ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த சாதனையை பாக்கர்ஸ் பைலட் பிஸ்கட் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT