வடக்கு இங்கிலாந்தில் கரோனா பரவல் அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “இங்கிலாந்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. வடக்கு இங்கிலாந்தில் கரோனா பரவல் சதவீதம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மதுபான விடுதிகள், கடைகள் ஆகியவற்றுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அனைவரும் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் அமலுக்கு வரும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.