உலகம்

வியட்நாமில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு: 13 பேர் பலி; 40 பேர் மாயம்

செய்திப்பிரிவு

வியட்நாமில் மோலேவ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து வியட்நாம் மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “வியட்நாமில் கடந்த சில நாட்களாக மோலோவ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் மாயமாகி உள்ளனர். மழையிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையை எதிர்பார்த்தோம். ஆனால், நிலச்சரிவுகள் இந்த அளவுக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என வியட்நாம் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் முதலே கனமழை காரணமாக வியட்நாம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தக் கனமழைக்கு வியட்நாமில் 56,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் வியட்நாம் அரசு எச்சரித்துள்ளது. சனிக்கிழமை வரையும் வியட்நாமில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT