பிரிட்டனில் கடந்த மே மாதத்துக்குப் பிறகு மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை தரப்பில், “பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 22,885 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,17,575 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 367 பேர் பலியாகினர். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 45,365 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்துக்குப் பிறகு தொடர்ந்து ஆறு வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளிகள், உணவு விடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இத்தாலியிலும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.