உலகம்

பிரான்ஸ் அதிபர் தனது மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்: துருக்கி அதிபர் விமர்சனம்

செய்திப்பிரிவு

இஸ்லாம் அணுகுமுறை குறித்த தனது மனநிலையை பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பரிசோதிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் கடுமையான போராட்டங்கள் பிரான்ஸுக்கு எதிராக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “இஸ்லாம் அணுகுமுறை குறித்த தனது மனநிலையை பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பரிசோதிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் பொருட்கள் மீது தடைவிதிக்க வேண்டும் என்று துருக்கி அரசு வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரத்தை சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்டபோது, அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்தே சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தின் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT