உலகம்

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 4.3 கோடியை நெருங்குகிறது

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.3 கோடியை நெருங்குகிறது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ உலகம் முழுவதும் 4,29,23,311 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

3.1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இந்தியா தொடர்ந்து கரோனா பாதிப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 88,89,179 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 79,09,959 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். பிரேசிலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

SCROLL FOR NEXT