சவுதி அரேபியாவில் மே மாதத்துக்குப் பிறகு கரோனா இறப்பு விகிதம் இம்மாதத்தில் குறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா சுகாதாரத் துறை தரப்பில், “ சவுதியில் இன்று (வெள்ளிக்கிழமை)கரோனாவுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். மே மாதத்திற்கு பிறகு சவுதியில் கரோனா பலி இம்மாதம் குறைந்துள்ளது. மேலும் புதிதாக 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரியாத்தில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் இதுவரை 3,30,578 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனிதப் பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்று கூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியது.
உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.1 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.