உலகம்

பிரிட்டனில் மோடி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவை

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் பயணத்தை சிறப்பிக்கும்விதமாக, லண்டனில் ஒரு மாத காலத்துக்கு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

நவம்பர் 12 முதல் 14ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், லண்டன் வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், மோடியின் வருகையை முன்னிட்டு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஒரு மாத காலத்துக்கு இயங்கும் இந்த பேருந்து சேவை மோடியின் பயண இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்.

இதே போல தற்காலிக ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரிட்டனில் அயல் நாட்டுப் பிரதமரின் பெயரில் போக்குவரத்து சேவை துவங்கப்படுவது இதுவே முதன்முறை.

இதைத் தவிர, மோடியின் பிரிட்டன் பயணத்தின் போது ஒலிம்பிக் விழா பாணியிலான வரவேற்பை அளிக்க 400 சமூக அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடைபெற்ற மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவிற்கு மோடியை அழைக்க முடிவு செய்த பிரிட்டன் அரசு பின்னர் அங்கு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி புதிய அரசு பதவி ஏற்ற பிறகு மோடியின் பயணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு பதவியேற்று சில மாதங்கள் ஆன நிலையில், மோடியின் பயணத்துக்கான நடவடிக்கைகளை பிரிட்டன் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT