துனிசியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “துனிசியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தேசிய அளவிலான ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதுவரை துனிசியாவில் 40,000 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 626 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவில் ஆரம்பத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. அதே நேரத்தில் தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.