உலகம்

வியட்நாமில் கனமழை: 90 பேர் பலி; பலர் மாயம்

செய்திப்பிரிவு

வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுக்கு 90 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “வியட்நாமில் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் பலியாகி உள்ளனர். 34 பேர் மாயமாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் 600 மில்லி மீட்டர்வரை மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வியட்நாமில் அடுத்த வாரமும் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகளை வியட்நாம் அரசு முடுக்கி விட்டுள்ளது.

கரோனா

வியட்நாமில் 1,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,031 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT