பூமியின் சுற்றளவு தூரத்துக்கு இந்தியர் ஒருவர் நடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் தனது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார்.
பஞ்சாபில், பிறந்து, அயர்லாந்தில் வசித்து வருபவர் வினோத் பஜாஜ். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. சென்னையில் பணியாற்றிய அவர், 1975-ம் ஆண்டு ஸ்காட்லாண்டில் குடியேறினார். பின்னர் அவர் அயர்லாந்தின் லிமெரிக் நகரில், குடும்பத்தினருடன் நீண்ட காலமாக வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற பொறியாளரான இவர் வணிக ஆலோசகர் பணியையும் மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக தீவிர நடைப்பயிற்சியை வினோத் பஜாஜ் மேற்கொண்டார். தினந்தோறும் அதிக அளவு தூரம் நடந்து தனது உடல் எடையைக் குறைத்தார் வினோத் பஜாஜ். கடந்த 2016-ம் ஆண்டு நடைப்பயிற்சியைத் தொடங்கிய வினோத் பஜாஜ், தற்போது பூமியின் சுற்றளவு தூரத்தை நடந்தே கடந்துள்ளார். 40,075 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ள இவர் இதை 1,496 நாட்களில் முடித்துள்ளார்.
இதுகுறித்து வினோஜ் பஜாஜ் கூறியதாவது:
நான் வாரத்தில் 7 நாட்களும் அதிக தூரம் நடைப்பயிற்சியை மேற்கொண்டு 8 கிலோ வரை உடல் எடையைக் குறைத்தேன். தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டதால் அடுத்த 6 மாதத்தில் 12 கிலோ வரை உடல் எடை குறைந்தது. இதற்காக எனது உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
நடையை பதிவு செய்ய பேசர் ஆக்டிவிட்டி டிராக்கர் செயலியை பயன்படுத்தினேன். இதன்மூலம் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் கணக்கிடப்படுகிறது. முதலாண்டு முடிவில் 7,600 கிலோ மீட்டர் தூரம் நடந்த நான், 2-ம் ஆண்டு முடிவில் 15,200 கிலோ மீட்டரை நிறைவு செய்திருந்தேன். 4-ம் ஆண்டு முடிவில் 40,075 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளேன். இது பூமியின் சுற்றளவு தூரமாகும்.
தற்போது இந்தத் தூரத்தை நடந்து கடந்ததற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்து உள்ளேன். 1,496 நாட்களில் 5,46,33,135 காலடிகளை வைத்துள்ளேன். உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சியே சிறந்தது. ஓடுதலை விட சிறந்தது நடைப்பயிற்சிதான். இவ்வாறு வினோத் பஜாஜ் கூறினார்.