உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடக்கும் போர் ரஷ்ய எல்லை வரை பரவியுள்ளது. இதையடுத்து, அங்கு நிலவும் பிரச்சினைக்கு ராஜீய ரீதியில் தீர்வு காண மேற்கத்திய நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
ஜெர்மனி தலைமையில் புதிய அமைதிப் பேச்சுவார்த்தை என்ற திட்டத்தை ரஷ்யா நிராகரித்து விட்டது. இதையடுத்து ஐரோப்பா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரும், சுவிட்ஸர்லாந்து அதிபருமான திதீயர் புர்கால்டர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்கவுள்ளார்.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை மீட்க, உக்ரைன் அரசு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி
யுள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அமைந்துள்ள உக்ரைன் இடைக்கால அரசுடன், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹாக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
முன்னேறும் ராணுவம்
இதனிடையே, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த டவுன்ஹால் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு பறந்து கொண்டிருந்த ரஷ்ய தேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது.
ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் தொடர்ந்து சண்டை நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு ராணுவம் மேற்கொண்டுள்ள இடைவிடாத தாக்குதல்களால் 30க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் இச்சண்டையால் 90பேர் வரை உயிரிழந்துள்ளனர்.