உலகம்

அதிபரானால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன்: ஜோ பிடன்

செய்திப்பிரிவு

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஜோ பிடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “அதிபராக உங்கள் பங்களிப்புக்கு மதிப்பளிப்பேன். மேலும், சமூகத்தில் நிலவும் விஷத்தை நீக்குவேன். எனது நிர்வாகம் அமெரிக்காவைப் போலவே இருக்கும். அமெரிக்க முஸ்லிம்கள் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுவார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT