அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்ப், அவர்களின் மகன் பாரன் ட்ரம்ப் : படம் உதவி | ட்விட்டர். 
உலகம்

ட்ரம்ப்பின் 14 வயது மகனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்: மெலானியா ட்ரம்ப் தகவல்

பிடிஐ

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 14 வயது மகன் பாரன் ட்ரம்ப்பும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இப்போது கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார் என்று ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாரன் ட்ரம்ப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக இதுவரை வெள்ளை மாளிகை தெரிவிக்காத நிலையில், மெலானியா ட்ரம்ப் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1-ம் தேதி அதிபர் ட்ரம்ப்புக்கும், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர்களிடம் இருந்து வேறு இடத்துக்கு பாரன் ட்ரம்ப் சென்றபோது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால், அதன்பின் பாரன் ட்ரம்ப்புக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதுகுறித்து மெலானியா ட்ரம்ப் தனது பிளாக்கில் பதிவிட்ட கருத்தில், “என்னுடைய அச்சம் உண்மையானது. என் மகன் பாரனுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நல்வாய்ப்பாக அவருக்கு வளரும் இளம்வயது என்பதால், எந்தவிதமான அறிகுறியும் இல்லை.

ஒரு வகையில் நாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் கரோனாவைக் கடந்து சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். எனவே நாங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு ஒன்றாக நேரத்தைச் செலவிட முடிந்தது. இப்போது என் மகன் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார்.

எனக்கு மிகக் குறைந்த அறிகுறிகளுடன் கரோனா வரைஸ் தொற்று இருந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஆனால், நாளுக்கு நாள் அறிகுறிகள் அதிகமாகின. குறிப்பாக உடல் வலி, இருமல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டன. இயற்கையான வழியில்தான் மருத்துவம் எடுத்துக்கொண்டேன். சத்துள்ள பழங்கள், உணவுகள், வைட்டமின் மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டேன்.

எங்களுக்கு மிகச்சிறந்த மருத்துவர்கள் கிடைத்திருந்தார்கள். அவர்கள் எங்கள் மிகவும் அன்புடனும், ஆழ்ந்த கவனிப்புடனும் சிகிச்சையளித்தனர். மருத்துவர் கான்லே குழுவினருக்கு எனது நன்றிகள்.

ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று ஒரு தேசத்தின் மக்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் உள்ள நான் கரோனாவில் பாதிக்கப்பட்டது புதிய உணர்வாக இருந்தது. இருப்பினும் என்னை நான் மிகவும் பாதுகாப்பாக கவனித்துக்கொண்டு, அதில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்கிறேன்.

உங்கள் முழுமையான நல்வாழ்வுக்கும், உங்கள் மனதை வலிமையாக வைத்திருப்பதற்கும் இரக்கமும் பணிவும் முக்கியம். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, நான் விரைவாக குணமடைந்ததில் பல விஷயங்களை என்னால் சமூகத்துக்குப் பிரதிபலிக்க முடிந்துத. குறிப்பாக எனது குடும்பம், நட்பு, எனது பணி மற்றும் நாம் யார் என்பதைக் கூறுவதற்கு வாய்ப்பாக இருந்தது” என மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT