“ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக இலங்கையில் அமல்படுத்துங்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான நிரந்தர தீர்வு காண, விரைவில் பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா. சபை தொடங்கி 70-வது ஆண்டு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டுக்கு வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, பான் கி மூன் பேசிய விவர அறிக்கையை அவருடைய செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். அதற்கு விரைவில் பேச்சுவார்த்தை நடத் துங்கள் என்று சிறிசேனாவிடம் மூன் வலியுறுத் தினார். ஐ.நா. மனித உரிமை ஆணையம் வழங்கும் பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்தும்படியும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கையில் போருக்கு பின்னர் எடுக்கப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று சிறிசேனாவிடம் மூன் தெரிவித்தார்.