வறுமை மற்றும் போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “அதிகளுக்கு அளித்து வரும் உதவிகளுக்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை பாராட்டுகிறேன். அதேவேளையில் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இத்தலைவர்கள் தங்கள் உதவிகளை அதிகரிப்பார்கள் என நம்புகிறேன்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மனிதாபிமான சட்டங்கள் மற்றும் அகதிகள் சட்டவிதிகளின்படி அகதிகள் மனிதாபிமான அடிப்படையிலும் பொறுப்புடனும் நடத்தப்பட வேண்டும்.
ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் நாடுகளின் எல்லையை திறந்து, அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும். அகதிகளுக்கு நாம் கருணை காட்டவேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமைதிப் பணியில் சீர்திருத்தம்
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக உயர்நிலைக் குழுவை பான் கி மூன் கடந்த ஆண்டு அமைத்தார். புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைதிப் பணிகளை வலுப்படுத்துவதற்கு இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த ஜூன் மாதம் அளித்தது.
இந்தப் பரிந்துரைகள் மீது பான் கி மூன் அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையில், “புதிய சவால்களுக்கு ஏற்ப ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கையில் அடிப்படை மாற்றங்களை உடனடியாக செய்யவேண்டியுள்ளது. மோதலை தடுக்கும் மற்றும் சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு விரைவாக எதிர்வினையாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.