கரோனா வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் பேசும்போது, “ நான் கரோனாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டேன். அது நீண்ட காலம் இருக்கலாம். குறைந்த காலமும் இருக்கலாம். யாருக்கும் அது தெரியாது” என்றார்.
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பின் உடல்நலனைக் கவனித்து வரும் மருத்துவர் சீன் கான்லி கூறும்போது, “ட்ரம்ப்புக்கு அக்டோபர் 1 ஆம் தேதி கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் மூன்று நாட்களில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். ட்ரம்ப்பிடமிருந்து யாருக்கும் கரோனா பரவ வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
ஆனால், கரோனா தொற்றிலிருந்து ட்ரம்ப் முழுமையாக மீண்டுள்ளாரா என்பது குறித்து மருத்துவர் சீன் கான்லி தெரிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த 1 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால், ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ட்ரம்ப் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.