250 அமெரிக்கர்கள் உட்பட 2011-ம் ஆண்டு முதல் சுமார் 30,000 பேர் சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்குச் சென்றதாகவும், இதில் பலரும் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் இணைய முடிவெடுத்ததாகவும் ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச நாடுகள் எல்லைகளில் பாதுகாப்பை இறுக்கியும், உளவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் வலுப்படுத்தியும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இந்த புதிய தீவிரவாத அமைப்பை அசைக்க முடியவில்லை என்றே தெரிகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்பாக ஐ.எஸ்.-இல் இணையும் நோக்குடன் சிரியா மற்றும் இராக்கிற்கு சென்ற அமெரிக்கர்கள் எண்ணிக்கை 100 ஆக இருந்தது தற்போது இரட்டிப்பாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் ரகசிய மதிப்பீடு ஒன்றை தயாரித்து உள்ளனர். அதன் படி 2011-ம் ஆண்டு முதல் சுமார் 100 நாடுகளுக்கும் மேலான பகுதிகளிலிருந்து 30,000 அயல்நாட்டினர் இராக் மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே அதிகாரிகளின் கணக்குப் படி 80 நாடுகளிலிருந்து 15,000 பேர் இராக், சிரியாவுக்குச் சென்றுள்ளனர் என்றும் இவர்களில் பலர் ஐ.எஸ்.இல் இணைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவில் இதனை தடுக்க கடுமையான கண்காணிப்புகள், சட்டத்திட்டங்கள் இருந்தும் ஜிஹாதிகளுடன் இணையும் அமெரிக்கர்களை தடுக்க முடியவில்லை.
ஐஎஸ் அமைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை, முறியடிப்பது என்பது ஒரு தொலைதூர விவகாரமாக இருந்தாலும் இந்த தீவிரவாதத்தினால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய அளவில் மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன், கூட்டணிப் படைகள் 10,000 இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளை அழித்துள்ளதாக கூறி வந்தாலும், மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 பேர்கள் ஐ.எஸ்.இல் இணைந்து வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பல மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே தெரிவித்த போது “25,000 பேர்களுக்கும் அதிகமானோர்” அதில் மேற்கு நாடுகளிலிருந்து மட்டும் 4,500 பேர் உட்பட ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாக மதிப்பிட்டது.
ஆனால் இவையெல்லாம் தோராயமான கணக்கீடுதான் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். காரணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உத்திகள் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிரிட்டனிலிருந்து ஐ.எஸ்.-இல் இணைய இராக் மற்றும் சிரியாவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 500, இது நடப்பாண்டில் 750-ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிப்பேர் சொந்த நாட்டுக்குத் திரும்பினர், காரணம் ஐ.எஸ். பிரிட்டன் மண்ணில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அந்தச் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.